Sunday, December 28, 2008

இஸ்லாமிய (ஹிஜ்ரி 1430) புத்தாண்டு வாழ்த்துக்கள்

உலக முஸ்லிம்கள் அனைவர்களுக்கும் என் இதயங்கனிந்த இஸ்லாமிய (ஹிஜ்ரி 1430) புத்தாண்டு நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன், உலகம் முழுவதும் அமைதியும், சமாதானமும், சகோதரத்துவமும் நிலவ எல்லாம் வல்ல இறைவனிடம் இறைஞ்சுகின்றேன்.

அன்புடன்
A.அப்துல் முத்தலிப்
குவைத்

Tuesday, December 23, 2008

உலக வல்லரசின் இன்றைய நிலை ?

உலகத்தின் காவல்காரன், பெரியண்ணன் வல்லரசு என்று மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்காவின் இன்றைய உண்மை நிலை தெரியுமா உங்களுக்கு,

இன்று அமெரிக்காவின் ஒவ்வொரு நாளும் 2 பில்லியன் டாலர் கடன் வாங்கி செலவிட்டுத்தான் கடத்தப் படுகிறது.

அமெரிக்காவில் கடன் இல்லாத எந்த குடிமகனும் கிடையாது என்று சொல்லும் அளவுக்கு எல்லோருமே கடன்காரர்களாக உள்ளனர்.

அமெரிக்காவில் புழக்கத்தில் உள்ள கடன் அட்டைகள் (கிரெடிட் கார்டுகள்) மொத்தம் நூற்றி ஐம்பது கோடி.

அந்த நாட்டின் ஒட்டு மொத்த மக்கள் தொகையே முப்பது கோடிதான்.

அப்படியானால் சராசரியாக ஒவ்வொரு அமெரிக்கக் குடிமகனும் ஐந்து கடன் அட்டைகளை வைத்துள்ளார்கள்.

ஒவ்வொரு ஒரு கடன் அட்டைக்கும் எவ்வளவு கடன் இருக்கும் என்று நீங்களே கணக்கிடுங்கள்.

ஒட்டு மொத்தமாக எல்லா அமெரிக்கக் குடிமகன்கலுமே கடன் வாங்கித்தான் அன்றாட வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர்.

இன்று அமெரிக்கக் குடும்பங்களின் சேமிப்பு மைனஸ் 22 % என்பதில் இருந்து அவர்களின் நிலை உணர முடிகிறது.

எந்தக் குடும்பமும் சேமிக்கும் நிலையிலேயே இல்லை, எல்லாக் குடும்பங்களும் கடனில் சிக்கி உழல்கின்றன.

33 மில்லியன் அமரிக்கர்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் ஏழைகள்.

தினந்தோறும் 20 மில்லியன் அமெரிக்கர்கள் பட்டினியால் வாடுகின்றனர்.

இந்த எண்ணிக்கைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன.

சமூக சீரழிவுகள்:

ஒவ்வொரு இரண்டு நிமிடத்திற்கும் ஒரு பெண் கற்பழிக்கப் படுகிறாள்.

20 % பள்ளிச் சிறுமிகள் தாய்மை அடைகின்றனர்.


பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படும் பெண்களில் மூன்றில் ஒரு பங்கு ஆறு வயதிற்கும் கீழேயான குழந்தைகள்.

15-19 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் வருடத்திற்கு 3500 பேர் சராசரியாகக் கொலை செய்யப் படுகின்றனர்.

இந்த வயதை ஒத்த 150,000 இளைஞர்கள் வன்முறைகள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு ஆண்டு தோறும் கைதாகின்றனர்.

உலகின் அசைக்க முடியாத வல்லரசு என்று தன்னை மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்காவிற்கு ஏன் இந்த இழிநிலை?

உழைத்துச் சேர்த்த சொத்துதானே நிலைக்கும், ஊரை அடித்து உலையில் போட்டவர்கள் எத்தனை நாள் நிம்மதியாக இருந்து விட முடியும்.

அமெரிக்கர்கள் தாங்கள் மற்ற நாடுகளுக்கு எதிராகச் செய்த சதிகள், அராஜகங்கள், அட்டூழியங்கள் ஆகியவற்றின் பலனை இப்போது அனுபவிக்கத் தொடங்கி விட்டனர்,

தங்களது புத்திசாலித் தனங்களாலும், தங்களுடைய கடினமான உழைப்பாலும் உலகின் ஒரே வல்லரசாக முன்னேறியதாகக் கூறிக் கொள்ளும் அமெரிக்கர்கள் உண்மையிலேயே தங்களின் மேன்மை நிலையை நேர்மையாக அடையவில்லை.

ஆரம்பம் முதலே அமெரிக்கர்கள் மற்ற நாடுகளை தங்களின் திட்டமிட்ட சதிச் செயல்களாலும் , மிரட்டல்களாலும், வஞ்சக சூழ்ச்சிகளாலும், உள்நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்துவதாலும் வளர விடாமல் ஒடுக்கும் நடவடிக்கைகளைத் திட்டமிட்டு செய்து வந்தனர்.

அமெரிக்கர்கள் தங்களுடைய குறுக்குப் புத்தியினால் பெற்ற வெற்றிகளைப் போலவே இன்று அதனாலேயே தங்கள் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைவதைத் தடுக்க இயலாமல் தவிக்கின்றனர்.

அவர்களின் சதிச் செயல்கள் பற்றிப் பார்க்கும் முன்னர் அமெரிக்கர்கள் எப்படி இந்த மேன்மை நிலையை அடைந்தார்கள் என்று விரிவாகப் பார்ப்போம்.

அமெரிக்காவின் பொருளாதாரம் சமீபத்தில் நிலை குலைந்த போது அதன் தாக்கம் இன்று உலக நாடுகள் எல்லாவற்றிலுமே எதிரொலிக்கிறது.

உலக நாடுகளின் மீது அமெரிக்காவின் அடக்குமுறைகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப் படும் பொது அந்த நாடுகளின் பொருளாதாரங்கள் மிகப் பெரிய தேக்க நிலையை அடைகின்றன.

உண்மையிலேயே அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் தான் உலகம் இருக்கிறதா?

உலகத்தின் பொருளாதாரமே அமெரிக்கர்கள் காட்டும் திசையில்தான் பயணிக்குமா?

இன்று உலக நாடுகள் எல்லாவற்றின் மீதும் அமெரிக்காவின் ஆதிக்கம் இருப்பதாகவே உணரப் படுகிறது. உலகத்தின் பொருளாதாரமே அமெரிக்காவின் கையில்தான் உள்ளது என்ற தோற்றம் எப்படி உண்டானது?

அமெரிக்கர்களின் பலம் என்ன?

இயற்கை வளங்கள்:

உலகின் ஒட்டுமொத்த இயற்கை வளங்களில் 50 % அமெரிக்காவில்தான் உள்ளது.

அதாவது மற்ற எல்லா உலக நாடுகளும் சேர்ந்து எந்த அளவு இயற்கை வளங்களை பெருள்ளனவோ அந்த அளவு இயற்கை வளங்களை அமெரிக்கா மட்டுமே பெற்று அனுபவித்து வருகிறது.

மக்கள்தொகை:

உலகின் மக்கள்தொகையில் அமெரிக்காவின் பங்கு 4% மட்டுமே.

உலகில் உள்ள 50% இயற்கை வளங்களை உலக மக்கள் தொகையில் 4% மட்டுமே உள்ள அமெரிக்கர்கள் அனுபவிக்கின்றனர்.

மற்ற உலக நாடுகளில் உள்ள 96 பேர் எந்த அளவு இயற்கை வளங்களைப் பயன்படுத்த முடியுமோ , அந்த ளவு இயற்கை வளங்களை வெறும் 4 அமெரிக்கர்கள் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த ளவு இயற்கை வளங்களைத் தங்கள் கையில் வைத்திருப்பது அமெரிக்காவின் மிகப் பெரிய பலம் ஆகும்.

தங்கம்:

உலகின் ஒட்டுமொத்த தங்க இருப்பில் 70% - 80% அளவிற்கு அமெரிக்கர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இன்று பெரும்பாலான நாடுகளில் மிக விலை உயர்ந்த பொருளாக மதிக்கப் படும் தங்கம் நான்கில் மூன்று பங்கு அமெரிக்கர்கள் வசமே உள்ளது.

மற்ற நாடுகளின் பொருளாதாரத்தைக் கட்டுப் படுத்துவது:

உலக நாடுகள் எல்லாவற்றிலும் அமெரிக்காவின் முதலீடு அதிகமாக இருக்கும் படி செய்வது.

உலக நாடுகளில் பெரும்பாலான தொழில்களை அமெரிக்க நிஇருவனன்களே செய்கின்றன, அல்லது அந்த நாடுகளின் முக்கிய நிறுவனங்களில் அமெரிக்காவின் முதலீடு அதிக அளவில் இருக்கும்.

இப்படிப் பட்ட முதலீடுகள் மூலம் அந்த நாடுகளின் தொளிதுரையைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு அந்த நாடுகளின் மற்ற நிறுவனங்களை நசுக்கி ஒடுக்குவது.

இதனால் அந்த நாடுகளின் பொருளாதாரமே இவர்களின்முதலீட்டின் அடிப்படையில் இருக்குமாறு செய்து அந்த நாடுகளைக் கட்டுப் படுத்துவது, அவர்களின் முன்னேற்றத்தை ஒடுக்குவது என்பவை அமெரிக்காவுக்கு சாத்தியமாகிறது.


அமெரிக்காவில் முதலீடு:

அமெரிக்காவில் மற்ற நாடுகளின் முதலீடு குறைந்த அளவில் இருக்குமாறு செய்வது.

அமெரிக்காவின் மற்றொரு புத்திசாலித் தனமான வஞ்சகத் திட்டம், "மற்ற நாடுகளில் அமெரிக்க முதலீடுகளைக் குவிப்பது எவ்வளவு முக்கியமோ அதே போல தனது நாட்டில் மற்ற நாடுகளின் முதலீடுகள் அதிகம் வந்து விடாமல் பார்த்துக் கொள்வது".

இதனால் அமெரிக்காவின் தொழில்துறையும், பொருளாதாரமும் தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொள்ள முடியும்.

டாலரை உலக கரன்சி ஆக்கியது:

உலக நாடுகளுக்கு இடையேயான வர்த்தக நடவடிக்கைள் அமெரிக்க டாலரை அடிப்படையாகக் கொண்டு நடக்க செய்தது.

அமெரிக்க டாலரின் மதிப்பு அவர்களின் தங்கக் கையிருப்பைப் பொறுத்து கணக்கிடப்படும்.

அதாவது அமெரிக்க பெடெரல் வங்கி தான் மக்களிடையே புழக்கத்தில் விடும் ஒவ்வொரு அமெரிக்க டாலருக்கும் குறிப்பிட்ட அளவு தங்கத்தைக் கையிருப்பில் வைக்கும்.

அதாவது அந்த டாலரானது கையிருப்பில் வைக்கப்படும் தங்கத்தின் மதிப்பைப் பெரும்.
ஆனால் மற்ற பெரும்பாலான உலக நாடுகள் தங்கள் புழக்கத்தில் விடும் பணத்தின் மதிப்பிற்கேற்ப டாலரைக் கையிருப்பில் வைக்கின்றன.


எனவே ஒவ்வொரு நாட்டின் அந்நியச் செலாவணி (அதாவது டாலர்) கையிருப்பைப் பொறுத்தே அந்த நாட்டின் பணத்தின் மதிப்பு அமைகிறது.

இது போல பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரமே அந்த நாட்டின் டாலர் கையிருப்பைப் பொறுத்துதான் மதிப்பிடப் படுகிறது.

இதனால் டாலர் என்பது உலக நாடுகளின் பொருளாதாரத்தில் மிக முக்கியப் பங்கினை வகிப்பது போன்ற நிலையை உருவாக்கி விட்டனர்.

சிந்திப்போம். ஒன்றுபடுவோம். .
வளமான பாரதத்தை வல்லரசாக்குவோம் இன்ஷா அல்லாஹ் . . .

Thursday, December 11, 2008

மலேகானும், மக்கள் தீர்ப்பும்!

ஐந்து மாநில சட்டமன்றங்களின் தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் அரசியல் தளத்தில் பல்வேறு உணர்வுகளை - அதிர்ச்சி, ஆனந்தம், எமாற்றம், வெற்றி, தோல்வி - என அனைத்து உணர்வுகளையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக டெல்லி சட்டமன்றத்தை கைப்பற்றியுள்ள காங்கிரஸ் கட்சி மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளது. டெல்லி சட்டமன்றத்தை கைப்பற்றுவது, பாராளுமன்றத்தையே கைப்பற்றுவது போல் மிகவும் பெருமைக்குரிய ஒன்று. வழக்கமாக ஆளும் கட்சிக்கு எதிராகவே வாக்குகள் பதிவாகும். ஆனால் தொடர்ந்து 3-வது முறையாக காங்கிரஸ் கட்சியையே மக்கள் தேர்ந்தெடுத்திருப்பது மக்களின் உணர்வுகளை தெளிவாக காட்டுகிறது. டெல்லி மட்டுமல்லாமல் ராஜஸ்தான் சட்டமன்றத்தை பா.ஜ.க-விடமிருந்து காங்கிரஸ் கைப்பற்றியிருப்பதுதான் சங்பரி வாரங்களுக்கு உச்சகட்ட அதிர்ச்சியாகும்.
கடந்த தேர்தலில் ராஜஸ்தான் சட்டமன்றத்தில் 56 இடங்களை மட்டுமே பெற்ற காங்கிரஸ் இம்முறை 96 இடங்களை கைப்பற்றியுள்ளது. மத்தியப்பிரதேசத்திலும் 2003 - தேர்தலில் 38 இடங்களை மட்டுமே பெற்றிருந்த காங்கிரஸ் இம்முறை ஏறக்குறைய இருமடங்காக 71 இடங்களை கைப்பற்றியுள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்திலும் கடந்த முறை 37 இடங்களைப் பெற்றிருந்த காங்கிரஸ் இம்முறை ஒன்று கூடுதலாகி 38 இடங்களை கைப்பற்றியுள்ளது. மிசோரம் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 இடங்களில் 32 தொகுதிகளைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி கட்டிலேறுகிறது.
டெல்லி மற்றும் மிசோரம் தவிர மற்ற மாநிலங்கள் சென்ற முறை பா.ஜ.க.வின் ஆளுகையில் இருந்தவை. இவற்றில் மத்தியப்பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தாலும், அம்மாநிலங்களில் பா.ஜ.க. பெற்ற வாக்குகளின் சதவீதம் மிகவும் குறைந்துள்ளது. குறிப்பாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் 31 சட்டமன்ற தொகுதிகளை பா.ஜ.க. இழந்துள்ளது கவனிக்கத்தக்க ஒரு மாற்றம். வெற்றி பெற்றுவிடலாம் என்ற நப்பாசையுடன் இருந்த பா.ஜ.க. 42 சட்டமன்ற தொகுதிகளை இழந்து படுதோல்வியை சந்தித்துள்ளது.
இம்முறை தேர்தல் பிரச்சாரத்தில் பா.ஜ.க. முன்னிறுத்தியது நாடெங்கும் நடக்கும் தீவிரவாத - பயங்கரவாத தாக்குதல்களைத்தான். பயங்கரவாத செயல்களுக்கு முஸ்லிம் அமைப்புகள்தான் காரணம் என்றும், காங்கிரஸ் கட்சி தன்னுடைய ஓட்டு வங்கியை காப்பாற்றிக் கொள்வதற்காக தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை திறம்பட செய்யவில்லை என்றும், பொடா போன்ற சட்டங்களை மீண்டும் கடுமையான சட்ட ஷரத்துகளோடு கொண்டு வந்து தீவிரவாதத்தையும், பயங்கரவாதத்தையும் வேரறுக்க பா.ஜ.க-வால் மட்டுமே முடியுமென்றும் பசப்பியது. காங்கிரஸ் கட்சி கையாலாகாத கட்சி என்றும், தேச பாதுகாப்பு பற்றி காங்கிரஸ் கட்சிக்கு கவலையே இல்லையென்றும், பா.ஜ.க. மட்டுமே தேச நலனைப் பற்றி சிந்திக்கும் - பாடுபடும் தேசபக்தி மிக்க கட்சி என்றும் தம்பட்டமடித்தது.
ஆனால், மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் இந்த பசப்பு வார்த்தை காரர்களுக்கு புரியவைத்துவிட்டது. படுதோல்வி கண்ட ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜேயின் வார்த்தைகளில் கூறுவதென்றால், ஷஷமக்கள் எப்போதுமே அறிவாளிகள். அவர்களின் தீர்ப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களைத்தான் அறிவாளிகள் என்கிறார். அப்படியெனில் பா.ஜ.க-விற்கு வாக்களித்த வர்களை முட்டாள்கள் என சொல்லாமல் சொல்கிறாரா?
இந்த தேர்தலில் பா.ஜ.க.வின் தீவிரவாத - பயங்கரவாத எதிர்ப்பு முகமூடி மக்களைக் கவரவில்லை. காரணம், மலேகான் குண்டுவெடிப்பு சதிகளில் பா.ஜ.க.வின் நடவடிக்கை - அதன் தேசபக்த முகமூடியைக் கிழித்து, அதன் பயங்கரமான பாசிச முகத்தை - ரத்த வெறி கொண்ட சங்பரிவார முகத்தை - அழுகிப்போன இந்துத்துவா முகத்தை - மக்களுக்கு அடையாளம் காட்டிவிட்டது. மும்பை தாஜ் ஓட்டல் மீதான பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து நாடு முழுவதும் அனைத்து மக்களும், தங்களின் சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளை மறந்து இந்தியராக ஒன்றுபட்டு எழுந்து நின்று தீவிரவாதத்துக்கு எதிராக ஓங்கி குரல் கொடுத்த நேரத்தில், மும்பைத் தாக்குதலில் இறந்தவர்களின் பிணங்களை வைத்து அரசியல் நடத்த முயன்றது பா.ஜ.க. அதன் மலிவான தேர்தல் உத்தியை மக்கள் இனம் கண்டு நிராகரித்துவிட்டனர் என்பதுதான் பா.ஜ.க.வுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி.
மலேகான் சதிகாரர்களுக்கு ஆதரவாக பா.ஜ.க. வக்காலத்து வாங்கி பேசியதுடன், புலனாய்வு அமைப்பின் தலைவர் ஹேமந்த் கர்கரேவை மிகவும் இழிவாகப் பேசியதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பா.ஜ.க.வின் உளுத்துப் போன ஷஇஸ்லாமிய தீவிரவாதம் என்ற ஊளையை, மலேகான் சதித்தனம் அடையாளம் காட்டி விட்து. பா.ஜ.க.வின் ஊசிப் போன தேசபக்தியை மக்கள் நம்பவில்லை என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன.
இனி எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பா.ஜ.க., புதிய முகங்களையும், புதிது புதிதாக முகமூடிகளையும் மாட்டிக்கொண்டு வரும்போது மக்கள் அதன் சவப்பெட்டிக்கு கடைசி ஆணியை அறைய தயாராகிவிடுவார்கள்.


நன்றி: வெ. ஜீவகிரிதரன்
மாநில அமைப்பாளர், வழக்கறிஞர் அணி,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

Sunday, December 7, 2008

ஈத் முபாரக். . .

உலக முஸ்லிம்கள் அனைவர்களுக்கும் என் இதயங்கனிந்த தியாகத்திருநாள், ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்

A.அப்துல் முத்தலிப்
குவைத்



Thursday, December 4, 2008

சிந்தியுங்கள் . . .

வேண்டாம் டிசம்பர்-06 ம் நாள் (வெற்று) கோஷப் போராட்டம்

அருமையான முஸ்லிம் சகோதர சகோதரிகளே, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். . .

1992 ம் வருடம் டிசம்பர் 6 ம் நாள் பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட கொடூர நாள். அந்த நாளை எந்த ஒரு முஸ்லிமாலும் மறக்க முடியாத கருப்பு நாள். இந்தியாவில் பயங்கரவாதத்திற்கு இந்து மத வெறியர்களால் அடிக்கல் நாட்டப்பட்ட நாள்.

டிசம்பர்-06 ம் நாளை அமைதி நாளாக, சமூக நல்லிணக்க நாளாக, உறுதிமொழி ஏற்கும் நாளாக கடைபிடியுங்கள். பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட இந்த டிசம்பர்-06 ம் நாளை இஸ்லாம் காட்டித்தரும் வழியில் கடைபிடியுங்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் போர் வீரர்களுக்கு உதவி செய்வதற்காகத் தான் பெண்கள் நியமிக்கப்பட்டிருந்தார்களேத் தவிர ஆண்களுக்கு இணையாக போராட்டத்தில் கலந்துக்கொள்ள அல்ல என்பதை உணர வேண்டும்.

பெண்களை கண்ணியமாக கருதும் இஸ்லாம் ஒருபோதும் போராட்டத்தில் கலந்துக்கொள்ள அனுமதிக்கவில்லை.

பெண்களை அழைத்து போராடும் எந்த ஒரு இஸ்லாமிய அமைப்பும் வீரியம் நிறைந்த அமைப்பாக இருக்கமுடியாது. போராடுவதால் விழிப்புணர்வு ஏற்படும் என்று சொல்வதும் மடமையாகும். விழிப்புணர்வு போராட்டத்தில் இல்லை.

பெண்கள் சத்தமாகக்கூட அன்னிய ஆடவர்களுக்கு முன்னால் பேசக்கூடாது என்று சொல்லும் மார்க்கத்தில் கோஷம் போட அனுமதி உண்டா? பெண்கள் பூசும் நறுமணம்கூட அன்னிய ஆடவர்களுக்கு படாதவாறு இருக்கவேண்டும் என்று சொன்ன மார்க்கத்தில் ஆடவர்களோடு இணைந்து போராட அனுமதி கொடுத்தது யார்?

பாபரி மஸ்ஜித் மீட்பு போராட்டம் மட்டுமல்ல எந்த ஒரு போராட்டத்திலும் பெண்கள் கலந்துகொள்ள அனுமதியில்லை. அப்படி அனுமதிமட்டுமிருக்குமேயானால் நம் உயிரிலும் மேலான தலைவர், அல்லாஹ்வின் இறுதித் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நடைப்பெற்ற இஸலாமிய முதல் யுத்தமான பத்றுப் போரில் சத்திய ஸஹாபா பெருமக்கள் தங்கள் மனைவி மற்றும் பெண் மக்களை கலந்துக் கொள்ள செய்திருப்பார்கள்.

அருமையான முஸ்லிம்களே சிந்தியுங்கள்.


நம் உயிரிலும் மேலான தலைவர், அல்லாஹ்வின் இறுதித் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நடைப்பெற்ற எந்தப் போரிலாவது பெண்கள் கலந்து கொண்டிருக்கிறார்களா? ஆகவே பெண்களை கண்ணியமாக நடத்துங்கள். பெண்களை போராட்டக் கள பாதுகாப்பு அரணாக நிறுத்திவிடாதீர்கள்.

இஸலாம் கூறும் வழியில் போராடி பாபரி மஸ்ஜிதை இடித்தவர்களுக்கும் மற்றும் முஸ்லிம்களுக்கு தீங்கிழைக்கக்கூடியவர்களுக்கும் பாடம் கற்பியுங்கள்.

இஸ்லாம் கூறும் வழியில் போராடினால் இழந்தவைகளும் திரும்பும் முஸ்லிம்களுக்கு தீங்கிழைத்தவர்களும் ஹிதாயத் பெற (அல்லாஹ் நாடினால்) வாய்ப்பு ஏற்படும்

நன்றி:அபூ மஹ்தி

Tuesday, December 2, 2008

அரஃபா நோன்பின் மாண்பு

ரமலான் மாத கடமையான ஒரு மாத நோன்பைத் தவிர மற்ற சில நாட்களிலும் நோன்பு வைக்க நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்கள். அவற்றில் மிக முக்கியமான நோன்பு அரஃபா தின நோன்பாகும். ரமலானைத் தொடர்ந்து வரும் இஸ்லாமிய வருடத்தின் இறுதி மாதமான துல்ஹஜ் மாதம் ஒன்பதாம் நாள் அரஃபா தினமாகும். அதாவது ஹஜ் யாத்திரிகர்கள் ஹஜ்ஜின் முக்கிய கிரியைகளில் ஒன்றான அரஃபா மைதானத்தில் ஒன்று கூடும் நாளாகும். இந்நாளில் ஹஜ்ஜுக்கு செல்லாத மற்ற உலக முஸ்லிம்கள் நோன்பு நோற்குமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.

அரஃபா நாளில் நோன்பு நோற்பது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் "அது கடந்த வருடத்தின் மற்றும் வரக்கூடிய வருடத்தின் பாவத்தை போக்கிவிடும்!" என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி), நூல்: முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத்

நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் ஒன்பதாம் நாள் நோன்பு வைப்பார்கள் என்று நபிகளார்(ஸல்) அவர்களின் துணைவியார்களில் சிலர் கூறினார்கள். அறிவிப்பவர்: ஹுனைதாபின் காலித்(ரலி), நூல்கள்: அபூதாவூத், நஸயி, அஹ்மத்.

அரஃபா நோன்பை அவ்வருடம் ஹஜ்ஜிற்கு செல்லாதவர்கள் மட்டும் தான் நோற்க வேண்டும். ஏனெனில் அரஃபா தினத்தன்று அரஃபாவில் ஒன்று கூடியிருக்கும் ஹாஜிகள் நோன்பு நோற்பதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அரஃபா தினத்தன்று அரஃபா மைதானத்தில் (குழுமியிருப்போர்) நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் தடைவிதித்துள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்கள்: அபூதாவூத், அஹ்மத், நஸயி


அரஃபா மைதானம் என்பது மறுமையில் இறைவன் முன் மனிதர்கள் விசாரணைக்காக எழுப்பப்பட்டு நிறுத்தி வைக்கப்படும் மஹ்ஷர் மைதானத்திற்கு இவ்வுலகில் இறைவன் காண்பிக்கும் ஒரு உதாரணமாகும். இதனை அரஃபா மைதானத்தில் ஒரு முறையாவது ஹஜ்ஜிற்காக சென்று ஒன்று கூடியவர்கள் கண்ணார கண்டு உணர்ந்திருப்பார்கள். இலட்சக்கணக்கான மக்கள் ஒரு இடத்தில் ஒரே நேரத்தில் ஒன்று கூடுவதும் தன்னை படைத்தவனிடம் இருகரமேந்தி பாவமன்னிப்பு தேடுவதும் பல மணித்துளிகளுக்கு இவ்வுலக சிந்தையின்றி இறை தியானத்தில் இருப்பதும் இத்தினத்தில் அரஃபா மைதானத்தில் நிகழ்கிறது.

அதே தினம் உலகின் பிற பகுதிகளில் இருக்கும் முஸ்லிம்களும் இறை தியானத்தில் தங்களையும் ஈடுபடுத்த, நோன்பு வைப்பதற்கு நபி(ஸல்) அவர்கள் ஏவியிருப்பது பல்வேறு அர்த்தங்களையும், எதிர்பார்ப்புகளையும் வெளிப்படுத்தி நிற்கிறது. எனவே இத்தினத்தில் ஹஜ்ஜிற்கு செல்லாத மற்ற முஸ்லிம்கள் அவசியம் நோன்பு வைத்து தங்களையும் ஹஜ்ஜாஜிகளோடு இறைதியானத்தில் ஒன்றிணைக்க முயல வேண்டும்.

அரஃபா நாளில் நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டதற்கு மாறாக முஸ்லிம்களில் சிலர் துல்ஹஜ் ஆரம்ப பத்து நாட்கள் முழுவதும் நோன்பு நோற்கிறார்கள். அரஃபா தினம் அடங்கிய துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து தினங்களின் சிறப்பை நபி(ஸல்) அவர்கள் நவின்றுள்ளது தான் இதற்குக் காரணமாகும்.

அல்லாஹ்விடத்தில் துல்ஹஜ் பத்து நாட்களில் நற்காரியங்களை செய்வதற்கு மிகவும் விருப்பமான இந்த நாட்களை விட வேறெந்த நாட்களும் இல்லை. அதற்கு நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விற்காக போரிடுவதை விடவா? என்று வினவ, ஆம். அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதை விட என்றாலும் ஒரு வீரன் தன்னுடைய உயிர், உடமைகளோடு சென்று அதில் ஒன்றைக் கொண்டும் அவன் திரும்பவில்லையெனில் அது மிகவும் சிறந்த செயலே என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி), நூல்: புகாரி


இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த பத்து நாட்களின் சிறப்பைக் கருதி முஸ்லிம்களில் சிலர் இப்பத்து நாட்களிலும் நோன்பு நோற்கின்றனர். ஆனால் ஆயிஷா(ரலி) அவர்கள் இந்நாட்களில் நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதைக் கண்டதில்லை என்று மறுத்துரைக்கின்றார்கள்.

நான் நபி(ஸல்) அவர்களை (இந்த)பத்து நாட்களில் நோன்பு நோற்றதாக அறவே பார்த்ததில்லை. அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி), நூல்கள்: முஸ்லிம், திர்மிதி.

மற்றவரை விட எல்லாவிதத்திலும் முன்னிலையில் இறை தியானங்களில் ஈடுபடுவதை அதிகம் விரும்பி, தன்னை எல்லாவிதமான இறைதியானங்களிலும் ஈடுபடுத்தி முன்னுதாரணமாக விளங்கிய நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் பத்து நாட்கள் நோன்பு நோற்று இருந்தால் அதைப்பற்றியும் அறிவிப்புகள் வந்திருக்க வேண்டும். ஹதீஸ்களில் எந்த ஒரு நபித்தோழரும் அவ்வாறு அறிவித்தாக நாமறிந்தவரை செய்திகளைக் காண முடியவில்லை. எனவே இந்த அரஃபா நோன்புக்கு முந்திய தினங்களில் வேறு வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதே சாலச் சிறந்ததாகும். மற்ற நாட்களை விட இந்த நாட்களில் அல்லாஹ்வை துதிப்பதில் அதிகக் கவனம் செலுத்த முயற்சிக்க வேண்டும்.

நோன்பு நோற்பது இறைவனிடம் மிகப்பெரிய பாக்கியத்தைப் பெற்றுத்தரும் செயலாக இருந்தாலும் ரமலான் மாத கடமையான நோன்பைத் தவிர தொடர்ச்சியாக நோன்பு வைக்க முஸ்லிம்களின் வழிகாட்டி நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தரவில்லை. நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தராத, செய்து காண்பிக்காத எந்த செயலையும் மார்க்கத்தில் நல்லமலாக அங்கீகரிக்க இயலாது. ஆனால் அதே நேரம் குர்ஆன் ஓதுதல், திக்ருகள், தேவையுடையவருக்கு உதவுதல், இரவுத் தொழுகை, அல்லாஹ்வை புகழ்தல், இஸ்திக்ஃபார் அதாவது பாவமன்னிப்பு தேடுதல், ஸதகாத் தர்மங்கள் செய்வது போன்ற ஏனைய இறை அருளை பெற்றுத்தரும் காரியங்களில் ஈடுபடலாம். அல்லாஹ் மிக அறிந்தவன்.

அல்லாஹ் முஸ்லிம்கள் அனைவரின் நல் அமல்களையும், பிரார்த்தனைகளையும் ஏற்று நல்லருள் புரிவானாக... ஆமீன்.

நன்றி: தமிழ்இஸ்லாம்.காம் & சத்தியமார்க்கம்.காம்