Sunday, March 22, 2009

சகோ. ஜவாஹிருல்லாவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!

முஸ்லிம் லீக் அழிவின் விழிம்பிலே நிற்பதாக திருவாய் மலர்ந்துள்ளார் மமுகவின் அறிவிக்கப்படாத தலைவர் ஜவாஹிருல்லாஹ். இன்றைய தினமலரிலே இச்செய்தி வெளிவந்துள்ளது.

ஏகத்துவப் பாசறையின் முன்னாள் நண்பர்கள் அரசியல் வாதிகளான பிறகு, இப்போது ஜோசியக் காரர்களாகவும் புதுப் பரிணாமம் எடுத்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்ததையே ஒரு பொருட்டாக மதிக்காமல் அரசியலுக்கு வந்த பிறகு, இவர்கள் இப்படியெல்லாம் ஆரூடம் சொல்ல ஆரம்பித்திருப்பது ஆச்சரியம் இல்லை தான்.

ஒன்றை மட்டும் இந்த சந்தர்ப்பவாதிகள் இப்போது உணர்ந்திருப்பது நமக்குத் தெரிகின்றது.

முஸ்லிம் லீக் உள்ள வரை தங்கள் உள்ளடி வேலைகள் சமுதாயத்திலும்,அரசியல் அரங்கிலும் செல்லாது என்பது தான் அது.

கலைஞர் அரசு கொடுத்துள்ள சிவப்பு விளக்கு ஊர்தியிலே தனது பொதுச் செயலாளர் பவனி வரும் போது, ஜெயலலிதாவோடும் நாங்கள் கூட்டணி பேரம் பேசுவோம் என்று வெட்கமில்லாமல் சொல்லித் திரியும் ஒரு அரசியல் வியாபாரி, முஸ்லிம் லீகின் எதிர் காலம் பற்றி கணிப்பதற்கு யோக்கியதையில்லை. ஆயிரத்து நூறாண்டு காலம் இந்தியாவை ஆண்ட முஸ்லிம் சாம்ராஜ்ஜியத்தின் தொடர்ச்சியாக முஸ்லிம் லீகைப் பார்ப்பதால் தான் சங்பரிவாரங்களும், பிஜேபியும் முஸ்லிம் லீகை அழிப்பதற்கு கங்கணம் கட்டி வேலை செய்து வருகின்றார்கள்.

அத்தகையோரின் வயிற்றில் பால் வார்க்கும் வேலையை இவர்களும் செய்ய ஆரம்பித்துள்ளதை சமுதாயம் உற்று கவனிக்க ஆரம்பித்துள்ளது.

சில வருடங்களுக்கு முன்னால் இவர்களைத் தடை செய்ய வேண்டும் என்று ராமகோபாலன் அறிக்கை வெளியிட்ட போது, அதற்கு கடும் கண்டனத்தை முஸ்லிம் லீக் பதிவு செய்தது.

அரசியல் மாச்சரியங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு ,சமுதாய நலன் கருதி செயல்படும் இயக்கம் முஸ்லிம் லீக். சமுதாயத் தாய்ச்சபையும் அது தான். அதனால் தான் அண்ணல் அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபை செல்வதற்கு முஸ்லிம் லீக் துணைநின்றது.

இதன் மூலம் எத்தகைய பலன் நாம் பெற்றோம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதை வெளிச்சம் போட்டு , வியாபாரம் செய்யும் அவசியமும் நமக்கு இல்லை.

முஸ்லிம் சமுதாயம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு சுயமாகத் தீர்வு சொல்ல முடியாதோர், முஸ்லிம் லீகின் தலைவர்கள் தந்த தீர்வுகளை, ஊரெல்லாம் தங்கள் உயரிய கண்டுபிடிப்பாக இரவல் அரசியலாக நடத்தி வருவது நாம் அறியாததல்ல.

முஸ்லிம் என்று சொல்வதற்கு முதுகெலும்பில்லாமல், இரவல் பெயர் சூட்டிக் கொண்டு வந்தால் மற்ற சமுதாய மக்களையும் நம் பக்கம் இழுத்து விடலாம் என்று கனாக்காண்பதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு.

அல்லாஹ்வும், அவனின் திருத்தூதரும் காட்டித் தந்த வழியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பீடு நடைபோடுகின்றது.

சமூக நல்லிணக்கம் குறித்தும், மனித நேயம் குறித்தும் பேசுவதற்கு ஒரு முஸ்லிமை விடத் தகுதி படைத்தவர் யாருமில்லை என்ற உறுதியான நம்பிக்கை நமக்கிருக்கின்றது.

தன்னை முஸ்லிம் என்று அழைத்துக் கொள்வதை விட அழகான சொல் எதுவுமில்லை என்ற அல் குர்ஆனின் அறை கூவலை முஸ்லிம் லீக் பாராளுமன்றமாக இருந்தாலும் எதிரொலிக்கும்.

ஐக்கிய நாட்டுச் சபையாக இருந்தாலும் நம் தலைவர்கள் முஸ்லிம் தலைவர்கள் என்று தான் அறியப்படுள்ளார்கள்.

இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாமின் மார்க்கத்துச் சொந்தக்காரர்கள் நாங்கள் என்று சொல்லிக் கொள்வதில் முஸ்லிம் லீகர்கள் எந்தத் தயக்கமும் கொள்வதில்லை.

அல்லாஹ்வும், அவனின் திருத் தூதரும் இட்ட அழகிய பெயரையே நம் அன்னையும் , தந்தையும் நமக்குத் தந்தனர்.

அப்பெயரிலேயே பிறந்தோம்.அல்லாஹ்வின் அளப்பெரும் பேரருளால் அத்திருநாமத்தாலேயே அழைக்கவும்படுகின்றோம்.அவனளவில் மீளும் போதும் இன்ஷா அல்லாஹ் அத்திருநாமத்துடனேயே செல்வோம்.

முஸ்லிம் என்றே முழங்குவோம். முஸ்லிம் லீக்கிலே அரசியல் அறப் பணி செய்வோம்.

இதயங்களை இணைப்போம் ! இந்தியாவை வல்லரசாக்குவோம் !!

இதற்காக எத்தகைய தியாகத்தையும் செய்வோம் இன்ஷா அல்லாஹ். சட்டச் சிக்கல் வந்தால் சந்திப்போம்!

சதிகளைச் சமராடுவோம்!! சமூக நீதி சமைப்போம் !!!

இரவல் பெயர் வாங்கி அரசியல் நடத்தும் அவல நிலைக்குச் செல்ல மாட்டோம். யா அல்லாஹ்!

அத்தகைய இழிநிலையிலிருந்து எங்களைக் காப்பாயாக!!

முஸ்லிம் லீக்கின் அழிவில் தான் தங்கள் அரசியல் வாழ்வை நிலைப்படுத்தும் பரிதாப சூழ்நிலைக்கு சகோதரர் ஜவாஹிருல்லாஹ்வின் புது அரசியல் கட்சி தள்ளப்பட்டிருந்தால் நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஹக்கு சுப்ஹானஹுவதஆலா பல்வேறு சோதனைகளிலிருந்து இந்த இயக்கத்தைக் காப்பாற்றி, பவனி வரச் செய்துள்ளான்.

பண்டிதர்களிடத்திலிருந்தும், படேல்களிடத்திலிருந்தும் காப்பாற்றிய அல்லாஹ் தான் பாதகர்களிடத்திலிருந்தும் காப்பான் என்ற ஆழ்ந்த தக்வாவின் அடிப்படையிலே முஸ்லிம் லீகின் நெடும் பயணம் தொடர்கின்றது.

முஸ்லிம் லீக்கின் அழிவை எதிர்நோக்கி காத்திருப்போர் ஏமாற்றத்தின் விரக்தியிலிருந்து தங்களை காத்துக் கொள்ள தங்களின் கட்சிகளைக் கலைத்து விட்டு , தாய்ச் சபையாம் முஸ்லிம் லீக்கிலே தங்களை இணைத்துக் கொண்டு சமுதாயப் பணியாற்ற தோள் கொடுக்க வேண்டும் என்பதே நம் வேண்டுகோள். நல்லோர்களின் அவாவும் அதுவே!

ஏ. லியாக்கத் அலி பொதுச் செயலாளர்
முஹம்மது தாஹா இணைச் செயலாளர்
ஹமீது ரஹ்மான் இணைச் செயலாளர்
காயிதே மில்லத் பேரவை, யு. ஏ. இ.,

நன்றி : தமிழ் மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,
அமீரக காயிதெ மில்லத் பேரவை